டிட்டோ விஜயகாந்த் .. சென்னை மழைக்கு உதவி வேண்டுவோர்.. சாப்பிட, தங்க தேமுதிக அலுவலகத்தை அணுகலாம்
சென்னை: மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக அரசுக்கு, தேமுதிக தரப்பில் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எப்போது மழை வெள்ள பாதிப்பு வந்தாலும் சரி, புயல் அடித்தாலும் சரி, மக்களை காக்கும் பணியில் முன்னணியில் வந்து நிற்பவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. குஜராத் பூகம்பம், சுனாமி போன்ற தேசத்தை உலுக்கிய பல சோக நிகழ்வுகளுக்கு தன்னுடைய சொந்தச் செலவில் நிவாரணங்களை கொடுத்து உதவியவர்.

புயல், மழை, பூகம்பம் போன்ற பேரிடர் தான் சார்ந்த மாநிலத்திலோ அல்லது நாட்டின் வேறு பகுதியிலோ நிகழும் போது தன்னுடைய சுய வருமானத்தில் மிகப்பெரிய தொகையை வழங்கி, மற்ற நபர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். 2018-ல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்பில் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார் மனித நேய காலவர் விஜயகாந்த்.
நிதியுதவிகள்: குஜராத் பூகம்பம், ஒரிசா புயல் போன்றவற்றிற்கு அதிக நிதி வழங்கியதற்காகவும் ஏழை மாணவ, மாணவியரின் கல்விக்கு உதவியதற்காக 2001ம் ஆண்டு Best citizen of India என்ற விருதை மத்திய அரசிடம் இருந்து பெற்றவர் விஜயகாந்த்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகும்கூட, தானே புயல், ஆந்திரா புயல், ஒடிசா வெள்ளம் என பாரபட்சமின்றி முதல் ஆளாக முன் வந்து நிவாரணங்கள் வழங்கியவர்.. 2020-ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கவும், சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்ட போது, தன்னுடைய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும், தேமுதிக தலைமை அலுவலகத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசை கேட்டுக்கொண்டார் விஜயகாந்த்.
சென்னை மழை: இதோ இன்று சென்னை மழையில் தவிப்போருக்கும், அவரது தேமுதிக அலுவலகம், பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது:
"தமிழகம் முழுவதுமே கனமழை கொட்டி வருகிறது.. அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து இந்த மழைக்காலத்தில் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.
கனமழை: சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களை உடனடியாக பாதுகாத்து அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரை, அத்தியாவசிய பொருட்கள், என அனைத்தும் தாமதமில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும்.
முக்கியமாக மலைப் பகுதிகள், தாழ்வான பகுதிகள், குடிசை பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், இருக்கின்ற பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி இந்த மழை வெள்ளம் மக்களை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் வடிகால் திட்டமோ, மெட்ரோ திட்டமோ இன்று வரை நூறு சதவீதம் முடியவில்லை. எனவே சாலையில் செல்பவர்கள், இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே மூன்று உயிர்கள் மழை தேங்கி இருக்கும் குழியில் விழுந்து இறந்ததாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றது.
மின்சார துறை: மின்சார துறையையும் இந்த அரசு உடனடியாக துரித பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். எங்கெல்லாம் மின் வெட்டு பாதிப்பு, மின் கம்பங்கள் சாய்வதும், உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுவதை உடனடியாக கண்காணித்து மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான இடவசதி, மருத்துவ வசதி, என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து மழைக் காலத்தில் மக்களைக் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை.
தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) நீங்கள் தங்க பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய உணவுகள் அங்கு வழங்கப்படும்.
இயன்றதை செய்வோம்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர்கள் இருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவியை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற நமது தலைவரின் கொள்கை படி நம்மால் இயன்ற உதவியை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து உதவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications