சென்னையில் கொட்டும் கனமழை.. தண்ணீர் தேங்கிவிடுமோ.. மேம்பாலங்களில் வரிசைகட்டி நிற்கும் கார்கள்!
சென்னை: சென்னையில் நேற்றிரவு முதலே தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மேம்பாலங்களில் கார்களை நிறுத்த தொடங்கியுள்ளனர். தண்ணீர் தேங்க வாய்ப்புகள் இருப்பதால், கோடம்பாக்கம், வேளச்சேரி, ராயபுரம் உள்ளிட்ட மேம்பாலங்களில் கார்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
வடதமிழகத்தை அச்சுறுத்தி வந்த டிட்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு அருகில் கிழக்கே 40 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்று சொல்லப்பட்ட நிலையில், காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மாலையிலேயே சென்னையின் சில பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியது.
அதனை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை முதலே சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாசாலை, மெரினா, சாந்தோம், மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், வேளச்சேரி, பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, பட்டாளம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
அதேபோல் வேளச்சேரியில் தண்ணீர் தேங்க அதிக வாய்ப்புகள் இருப்பதால், பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு முன்பாக மணல் மூட்டைகளை நிரப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மேம்பாலங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கார்களை நிறுத்த தொடங்கியுள்ளனர்.
தண்ணீர் தேங்கும் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோடம்பாக்கம், வேளச்சேரி, ராயபுரம் உள்ளிட்ட மேம்பாலங்களில் கார்கள் வரிசை கட்ட நிற்கும் சூழல் உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டும் இதேபோல் மழைநீரில் கார்கள் மூழ்கிவிடுமோ என்ற அச்சத்தில் கார்கள் மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications