சென்னையில் மழை.. வறண்ட கிடக்கும் ஏரிகள் இப்பவாவது நிறையுமா? வடகிழக்கு பருவமழை நீர்நிலைகளை நிரப்புமா
சென்னை: தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு, வடகிழக்கு பருவமழையில் நீர்வரத்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும், ஆர்வமும் விவசாயிகளிடம் எழுந்துள்ளது. அத்துடன் 2 கோரிக்கைகளையும் தமிழக விவசாயிகள் தரப்பில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக மழையை தந்துவிட்டு போனது தென்கிழக்கு பருவமழை... ஆனாலும் 20 சதவீத நீர்நிலைகளில் ஒருசொட்டு தண்ணீர்கூட இல்லை என்கிறார்கள். தமிழகத்தின் நீர்வளத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் 14,139 நீர்நிலைகளில், 2802 நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டு போயிருக்கின்றனவாம்.

அதாவது, 5,963 நீர்நிலைகளில், வெறும் 25 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீர்தான் உள்ளதாக நீர்வளத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.. 502 ஏரிகள் மட்டும் முழு கொள்ளளவு நிரம்பியிருக்கின்றன.. 1,382 ஏரிகளில், 75 முதல் 99 சதவீதம் வரையும், 1,808 ஏரிகளில், 51 முதல் 75 சதவீதம் வரையும், 2,152 ஏரிகளில், 26 முதல் 50 சதவீதம் வரையும், 5,035 ஏரிகளில், 25 சதவீதம் வரையும் நீர் இருப்பு உள்ளது.
ஏரிகள்: இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் - 948, நெல்லையில் - 456, சிவகங்கையில் - 248, மதுரையில் - 190, விருதுநகரில் - 172, தூத்துக்குடியில் - 152, தென்காசியில் - 122, கள்ளக்குறிச்சியில் - 100 ஏரிகளும் உள்ளன.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைவிட, மதுரை, நெல்லை மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள்தான் வறண்டு போயிருப்பதாக கூறுகிறார்கள். ஏரிகள், குளங்கள், தடுப்பணைகளுக்கு இடையிலான இணைப்புகள் ஆக்கிரமிப்புகளால் தடைபடுவதே, இதற்கெல்லாம் மூலகாரணம் என்கிறார்கள்.
ஆக்கிரமிப்புகள்: நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்வரத்து கிடைக்கவில்லை என்று பரவலாக கூறப்பட்டாலும், அதற்கான காரணங்களை விரைந்து ஆராய வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பியிருக்கிறது.
சமீபத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது சொல்லும்போது, "தமிழகத்துக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய இயல்பு அளவைவிட 19 சதவீதம் கூடுதலாக பெய்திருக்கிறது. காவிரி படுகையில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய நீர்நிலைகள் வறண்டுதான் உள்ளன" என்று வேதனை தெரிவித்திருந்தார்.
விவசாயம்: அதுமட்டுமல்ல, வழக்கமாக வருடந்தோறும் டெல்டாவில், தாளடி, குருவை, சம்பா என 3 பருவ காலங்களிலும் விவசாயம் செய்யும் நிலையில், இப்போது தண்ணீர் பற்றாக்குறையால், வெறும் 2 பருவ காலங்களில் மட்டுமே விவசாயம் நடக்கிறது..
எனவே, வடகிழக்கு பருவமழையிலாவது, இந்த ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நீர்வளத்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்னார்குடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அத்துடன், நீர்நிலைகள் பராமரிப்புக்காக தமிழக அரசு கூடுதலான நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கைகளை விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.
வடகிழக்கு பருவமழை: இப்போதைக்கு தமிழகத்தில் 224 டிஎம்சி கொள்ளளவு உள்ள 90 அணைகள் இருந்தாலும், இவைகளில் 127 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.. பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டு வருவதால், இருப்பின் அளவும் குறைந்து கொண்டே வருவதால், வறண்டு கிடக்கும், 3,260 ஏரிகளுக்கும் வடகிழக்கு பருவமழையில் நீர்வரத்து கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications