சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பே இல்லை என்ற வானிலை மையம்.. ஆனாலும் அதிகாலையில் நடந்த ஆச்சரியம்
சென்னை: சென்னையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது... கடும் வெப்ப அலை நிலவி வந்த சென்னைக்கு இந்த மழை குளிர்ச்சியை தந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் வரை பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் பொதுவாக கோடை மழை என்பது அபூர்வமாகவே இருக்கும்.. அந்த வகையில் இன்று காலை பெய்த மழையும் இருந்தது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஏப்.3) முதல் வரும் 5-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இதன்படியே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு லேசாக ஆரம்பித்த மழை... காலை 6 மணி அளவில் கனமழையாக மாறியது.. சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது.. சூடாக இருந்த சென்னையின் நிலப்பரப்புகள் எல்லாம் அப்படியே குளிரத்தொடங்கின... கடும் வெயிலால் கட்டாந்தரைகள் எல்லாமே காய்ந்து கிடந்த நிலையில், மழை மண்ணின் வாசனையையே மாற்றியது..
வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்குடி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த திடீர் கோடை மழை பெய்தது.. அதேநேரம் என்ன தான் கோடை மழை பெய்தாலும், சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை..
இதனிடையே இன்று சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி முதல் திருநெல்வேலி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications