சூழும் கருமேகம்! சென்னையில் இன்றும் கனமழை பெய்யும்! ஆபீஸ் முடிச்சிட்டு சீக்கிரம் வீடு போய் சேருங்க!
சென்னை: இன்று சென்னையில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதே போல் மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றும் பலத்த மழை தொடரும். கர்நாடகாவின் காவிரி படுகையில் உள்ள அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணையில் 26,424 கனஅடி நீரும், கபினிக்கு 23,407 கனஅடி நீரும் ஹேமாவதி அணையில் 22,105 கனஅடி நீரும், ஹாரங்கியில் 3,852 கன அடி நீரும் வந்து கொண்டிருந்தது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை பதிவான மழையின் அளவு மி.மீ.ரில்:
நீலகிரி மாவட்டம்
பார்சன் வேலி- 192, அவலாஞ்சி- 142, சாம்ராஜ்- 135, அப்பர் பவானி- 129, குந்தா- 96, போர்த்திமுந்த்- 95, ஷோலூர்- 80, நடுவட்டம்- 70, கிளென்மர்கன்- 70 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டம்
சின்னக்கல்லார் 146 மி.மீ., சோலையார் 105, சிறுவாணி அடிவாரம் 70 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம்
நலமுக்கு- 126, ஊத்து- 120, காக்கச்சி 118, மாஞ்சோலை - 102, பாபநாசம்- 82, சேர்வலார் அணை 72 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
தேனி மாவட்டம்
பெரியார் அணையில் 73 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையின் வடக்கு மற்றும் மத்திய சென்னை பகுதியில் நேற்று நல்ல மழை பெய்தது. இன்றும் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மழை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும்.
இன்று (28-05-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (29-05-2025 மற்றும் 30-05-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும்,
திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (28-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (29-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
28-05-2025 முதல் 30-05-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
31-05-2025 மற்றும் 01-06-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29-05-2025: வடக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், இதர தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications