புயல் இருக்கு.. ஆனா மழை பெருசா இல்லை! சென்னையில் தற்போதைய நிலை இதுதான்
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக சென்னையில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை பரவலாக மழை பெய்தது. ஆனால் மதியம் நிலவரப்படி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய மழை இல்லை.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வங்கக்கடலில் புயல் உருவாவது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. இந்த ஆண்டும் புயலுக்கு முன்னோட்டமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அந்தமான் நிகோபர் பகுதியை ஒட்டிய இடத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, வட தமிழகத்தை நோக்கிர வர தொடங்கியது. அதே நேரம் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மையமாகவும், மண்டலமாகவும் உருவானது. தற்போது சென்னயைிலிருந்து 390 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து 300 கி.மீ தொலைவிடும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது.

நேற்று நிலவரத்தை பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடலிலேயே தற்காலிக புயலாக வலுப்பெற்று மீண்டும் வலுவிழந்துவிடும். வலுவிழந்த நிலையில்தான் சென்னையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றையை நிலவரத்தை பொறுத்த அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வலுவிழக்காமல் புயலாகவே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக நேற்றிரவு சென்னையில் மழை தொடங்கியது. கனமழை இல்லை என்றாலும், பலத்த காற்றுடன் சாரல் மழையாக பெய்தது. காலை 8 மணி வரையிலும் திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதாவரம், பெரம்பூர், ராயபுரம், கொருக்குப்பேட்டை, சென்ட்ரல், திருவல்லிக்கேணி, மையலாபூர், அடையாறு, தாம்பரம், கோயம்பேடு, வில்லிவாக்கம், அண்ணாநகர், அயனாவரம், பாடி, அம்பத்தூர், ஆவடி என பரவலாக மழை நீடித்தது. ஆனால், அதன் பின்னர் மழையின் தாக்கம் குறைந்துவிட்டது.
மதியம் 1 மணி நிலவரப்படி முகப்பேர், ஆவடி, அம்பத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. அதுவும் விட்டு விட்டு பெய்கிறது. எனவே சென்னையில் பகல் வேளைகளில் மழையின் தாக்கம் அதிகமாக இல்லை.
மழை எச்சரிக்கையை பொறுத்தவரை மதியம் 1 மணி வரை 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 6 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. அதேபோல அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 5.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications