சவாலான சூழல்.. இதையெல்லாம் உடனே செய்யனும்! 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
திருநெல்வேலி: தென் தமிழகத்தின் 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளம் பாதித்த மாவட்டத்தின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். இந்த ஆலோசனையில் சில உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த நான்கு மாவட்டங்களும் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

தூத்துக்குடியில் கடந்த 24 மணி நேரத்தில், காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழை பதிவாகியுள்ளது. இதே திருநெல்வேலியை பொறுத்த அளவில் மூலக்கரைப்பட்டி - 61 செ.மீ, நாங்குநேரி - 33 செ.மீ, மாஞ்சோலை - 55, ஊத்து - 50, நாலுமுக்கு - 47 செ.மீ, பாளையங்கோட்டை - 44 செ.மீ, அம்பாசமுத்திரம் - 43செ.மீ, சேரன்மகாதேவி - 41 செ.மீ, கன்னட அணைக்கட்டு - 41 செ.மீ, காக்காச்சி - 36 செ.மீ, நம்பியார் அணை - 36 செ.மீ, பாபநாசம் - 35 செ.மீ, மணிமுத்தாறு - 33 செ.மீ, களக்காடு - 32 செ.மீ, திருநெல்வேலி - 31 செ.மீ, கொடுமுடியாறு அணை - 30 செ.மீ, சேர்வலர் அணை - 27 செ.மீ, ராதாபுரம் - 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இப்படி ஒரு மழையை நாங்கள் பார்த்ததில்லை என இம்மாவட்ட மக்கள் கூறுகின்றனர். பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உயிர் பயத்தில் மக்கள் வீடுகளின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு உணவு கொண்டு சேர்க்க முடியாமல் மீட்பு படையினர் தவித்து வருகின்றனர். சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து தென் மாவட்டங்களின் சில பகுதிகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியிலிருந்து, வெள்ளளம் பாதித்த 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். அதாவது, "வரலாறு காணாத இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக மீட்டு, குறுகிய காலத்தில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம்.
மக்களை உடனடியாக மீட்டெடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டியது தான் நம் தற்போது இருக்கக்கூடிய தலையாய கடமை. இந்தப் மீட்புப்பணிகளில் ராணுவம், NDRF. SDRF ஆகியவற்றோடு இணைந்து, காவல்துறையும், தீயணைப்பு துறையும், வருவாய்த்துறையும் தொடர்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்க வேண்டும். இதற்கு தேவைப்படும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக புதிய முகாம்களை அமைத்திட வேண்டும்.
தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, உடைகள், போர்வைகள் போன்ற பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும். பக்கத்து மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்களை பெற்று தேவைப்படும் இடங்களுக்கு சரியான நேரத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டிய பணிகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும்.
நாம் அனைவரும் இணைந்து செயலாற்றி மக்களின் உயிர்களை காப்பாற்றி, அவர்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டிட வேண்டிய சவாலான நேரமாக இது அமைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications