வரலாறு காணாத மழை.. டெல்லி விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. மோடியுடன் நேரில் சந்திப்பு
சென்னை: ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளதால் தமிழக தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மழை வெள்ள பாதிப்பு குறித்து பிரதமரிடம் விளக்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.
வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்துள்ளதால் தமிழக தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் அபரிமிதமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டிசம்பர் 3,4ஆம் தேதிகளில் பெய்த மழையால் வெள்ளம் தேங்கியது. பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ரூ.5,060 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை, பிரதமர் நரேந்திர மோடியிடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.
இந்த சூழ்நிலையில் தமிழக தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. சாலைகள், ரயில் தண்டவாளங்கள் சிதைந்து போயுள்ளன. தென் மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. இதனையடுத்து 9 அமைச்சர்கள், ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச உள்ளார். தமிழக வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் விளக்கும் முதல்வர், வெள்ள நிவாரணத்திற்கு தேவையான பணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளார். கோவையில் இருந்து டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
வெள்ள பாதிப்புகளை குறித்து பிரதமர் மோடியிடம் நேரில் விளக்கம் அளித்து நிவாரண தொகை ஒதுக்குவது குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications