இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு.. தர்மசாலாவில் அடித்து செல்லப்பட்ட 20 பேர்.. 2 உடல்கள் மீட்பு
டெல்லி: இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமான அதீத கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் கனமழையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் காங்க்ரா மாவட்டத்தில் பாயும் ஆற்றில் தர்மசாலாவிற்கான நீர் மின் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த 20 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக அஞ்சப்படுகிறது. இதையடுத்து மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
எப்போதுமே அழகான மலைப்பகுதிகள் மலைக்காலங்களில் ஆபத்தான காடுகளாக மாறுகின்றன. அந்த வகையில் இமயமலையில் உள்ள அதீத அழகுடைய இமாச்சல பிரதேசம் அடிக்கடி கனமழை பெய்யும் மாநிலம் ஆகும். இமாச்சலப் பிரதேசத்தில் தென்மேற்கு பருவமழையின் போது மிகமிக உச்சகட்டமாக மழை பெய்யும். சில நேரங்களில் மேகவெடிப்பும் ஏற்படும். அந்த வகையில் தற்போதும் இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

காங்க்ரா மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக பியாஸ் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் காரணமாக தர்மசாலா நீர் மின் திட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். காங்க்ரா மாவட்டத்தில் உள்ள கானியாரா மனுனி காட்டில் தான் இத்தனை பேர் அடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள்.
இதனை தர்மசாலா எம்எல்ஏ சுதிர் சர்மா தனது சமூக ஊடகப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதை காங்க்ரா மாவட்ட கலெக்டரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுவரையில் இரண்டு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மீதமுள்ள தொழிலாளர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தர்மசாலாவின் கானியாராவில் உள்ள சௌகானி கா கோட் பகுதியில் இந்திரா பிரியதர்ஷினி நீர்மின் திட்டம் அமைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில், அனைத்து தொழிலாளர்களும் ஒரு தகரக் கொட்டகையில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அப்போது தான் சுமார் 20 பேர் மொத்தமாக அடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள். மாயமானவர்களின் நிலை குறித்து தெரியவில்லை.. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்த கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குலு மாவட்டத்தில் பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது, அங்குள்ள நதியில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர, பஞ்சார், சைஞ்ச், கசோல் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதேபோல் பஞ்சார் சட்டமன்றத் தொகுதியின் விஹாலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மண்டி மாவட்டத்தில் நீர்மட்டம் உயர்ந்ததால், பண்டோ அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குலு மாவட்டத்தின் சைஞ்ச் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பு காரணமாக பியாஸ் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, அணையிலிருந்து வினாடிக்கு 28,725 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக வரும் ஜூன் 27ம் தேதி வரை சிம்லாவில் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications