தென் சென்னை டூ செங்கல்பட்டு வரை.. செம மழை இருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: மேகங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் சென்னையின் பிற பகுதிகளில் கூட மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. தென்கிழக்கு பருவமழை காலத்தில் இயல்பைக் காட்டிலும் குறைவாகவே மழை பெய்தது. இதனால், வடகிழக்கு பருவமழையாவது எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாகவே தொடங்கியது. ஆனால், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது முதல் நல்ல மழை பெய்து வருகிறது.

அதிலும் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் இந்த மழை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நாளை (27-11-2023) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேரங்களில்: இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அப்படி நடந்தால் அது தமிழகத்திற்குப் பரவலாக மழையை தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை இன்று காலையில் இருந்து பெரிய அளவில் மழை எதுவும் பெய்யவில்லை. பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னை எழும்பூர், சென்ட்ரல், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- மேகங்கள் மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றன.
சென்னையில் எப்படி?: இரவு நேரத்தில் சென்னையின் பிற பகுதிகளில் கூட மழை பெய்யும். தென் சென்னை முதல் செங்கல்பட்டு, செங்கல்பட்டு டூ காஞ்சிபுரம் வரை நல்ல மழை பெய்யும். ஈசிஆர் பெல்ட்டில் கேளம்பாக்கம் டூ சோழிங்கநல்லூர் வரை நல்ல மழையை பெறும்" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications