சென்னை மக்களே.. குடிநீர் இருப்பு வைங்க! கார், பைக், பத்திரம்! ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசனை
சென்னை: கார், பைக் போன்ற வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும் குடிநீரை இருப்பு வைத்துக் கொள்ளுமாறும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட வடகிழக்கு பருவமழைக்கான் முன்னேற்பாடு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இன்று முதல் 17-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கான அறிவுரைகள்:
- தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பரிடர் மீட்பு படையினர் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளுக்கு முன் கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
- வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
- மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று ஆயத்த பணிகளையும் மீட்பு நிவாரண பணிகளையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
- பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
- உணவுத் துறை மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தங்கு தடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் , பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
- முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை இருப்பு அறிவுறுத்த வேண்டும்.
- நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து முன் கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
- ரொட்டி , குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும் மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் போது பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.
- அனைத்து மாவட்டங்களிலும் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
- மின் உற்பத்தி தடைப்படாமல் இருக்கவும் மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
- முட்டுக்காடு, பக்கிங்ஹாம் கால்வாய்- கலைஞர் கருணாநிதி பாலம் அருகில் ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர் வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும்.
- மழை அளவு, அணைகளில் நீர் வரத்து ஆகியவற்றைா தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.
- பொது சுகாதாரத்தை பேணிக்க காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அது போல் பொதுமக்களுக்கான அறிவுரைகள்:
- விவசாயிகள், மீனவர்கள் நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள் விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும் முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
- அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன் கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
- முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்கலை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர் நிலைகள் ஆகிய பகுதிகளில் கூட வேண்டாம்.
இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications