‛கொங்குவை சுத்துப்போட்ட மேகம்’.. கோவை, திருப்பூர், நீலகிரியில் இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை
கோவை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ‛ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேறு சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கொங்கு மண்டலத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்க உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ‛ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ‛ஆரஞ்சு அலர்ட்'டால் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ‛ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்படாத தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக வடக்கு கடலோரம், ஆந்திராவின் தெற்கு பகுதிகளையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவானது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவும். அதன்பிறகு வலுப்பற்று வடகிழக்கு, வடமேற்க பகுதிகளில் மே25ம் தேதி நிலவும். இதற்கிடையே கேரளாவின் தெற்கு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.
அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் . மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். தமிழகத்தின் மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications