ஆஹா சூப்பர்.. "சூழும் மழை மேகங்கள்.. சென்னைக்கு மழை கன்பார்ம்!" வெதர்மேன் சொல்வதை உடனே நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளில் இப்போது மழை பெய்து வருவதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே இரவு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெப்பம் உச்சத்தில் இருந்தது. ஆனால், ஜூன் மாதம் ஆரம்பித்த உடன் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவி வருகிறது.

குறிப்பாகக் கடந்த சில நாட்களாகச் சென்னை மற்றும் புறநகரிலேயே ஓரளவுக்கு மழை பெய்துள்ளது. இதற்கிடையே சென்னையில் மழை பெய்யுமா இல்லையா என்பது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
வெதர்மேன்: இது தொடர்பாக அவர் முதலில் தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரை உள்ளடக்கிய KTCC பகுதியில் ஆங்காங்கே மழை மேகங்கள் காணப்படுகின்றன.. சில தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் குறுகிய காலம் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சித்தூரில் உள்ள மழை மேகம் பெரிதாகுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். இன்று கடல் காற்று மிகவும் பலவீனமாக இருந்தது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே சற்று நேரத்திற்கு முன்பு அவர் மற்றொரு ட்வீட்டில், "வடக்கில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பெல்ட்களில் மழை பெய்கிறது. தெற்கே சிறுசேரியில் மழை பெய்து வருகிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான மேப்பையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த மழை மேகங்கள் எப்படிச் செல்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்து சென்னையில் மழை இருக்குமா இல்லையா என்பது தெரிய வரும்.

அதேபோல மற்றொரு ட்வீட்டில், "மேற்கே புதிய மழை மேகங்கள் உருவாகுகின்றன.. இதனால் சென்னையின் மையப் பகுதியில் சில பகுதிகளில் அடுத்த 1 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: சென்னை வானிலை மையமும் இரவு 11 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து இருந்தது. சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 13 முதல் 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications