பொங்கலுக்கு முன்னால் ஃபெங்கல்..ஆமை வேகத்தில் நகரும் கண்! நாளை காலைக்குள் 3 மாவட்டத்தில் சம்பவம்!
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 720 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்கு திசையில் நிலை கொண்டு உள்ளதாகவும், தற்போது 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், நாளை புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நேற்று காலை தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (26-11-2024) காலை 0830 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினத்தில் சுமார் 127 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடலூரில் 67 மில்லி மீட்டரும், தஞ்சாவூரில் 54 மில்லி மீட்டரும், சென்னை மீனம்பாக்கத்தில் 46 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இதேபோல நாகப்பட்டினம், திருவாரூர், மகாபலிபுரம், சிதம்பரம், சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து இருக்கிறது.
தற்போது,. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 240 கி.மீ., நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 520 கி.மீ தொலைவிலு, புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 640 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 720 கி.மீ. நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27ஆம் தேதி சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும்.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் மயிலாடுதுறை ,நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதே போல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூ,ர் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் அலட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

















Click it and Unblock the Notifications