பிச்சு உதறப்போகும் ‘மோந்தா’ புயல்.. புதுச்சேரி ஏனாம் பகுதிக்கு 3 நாட்கள் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரியின் ஏனாம் பகுதிக்கு நாளை முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு. மோந்தா புயல் எதிரொலி காரணமாக ஆந்திராவின் காக்கிநாடா அருகேயுள்ள ஏனாம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 27 முதல் 29 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மோந்தா புயலின் தாக்கம் காரணமாக ஏனாம் பகுதியில் வரும் 29 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ஏனாம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் 29 ஆம் தேதி வரை விடுமுறை என்று ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை மோந்தா புயலாக உருவெடுத்து, நாளை மறுநாள் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5:30 மணிக்கு மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் வடமேற்கில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு சுமார் 800 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது. நாளை காலை தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் புயலாக உருவெடுக்கும். தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் தீவிர புயலாக வலுவடையும். பின், ஆந்திர கடலோர பகுதிகளில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகே தீவிர புயலாக, அன்று மாலை முதல் இரவுக்குள் கரையை கடக்கும்.
இந்த நேரத்தில் 90 - 100 கி.மீ., வேகத்திலும், சில நேரங்களில் 110 கி.மீ., வேகத்திலும் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும். நாளை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கனமழை அத்துடன், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் கனமழை பெய்யும். நாளை மறுதினம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் மாவட்டம் ஆந்திராவின் காக்கிநாடா அருகே அமைந்துள்ளது. மோந்தா புயலின் தாக்கம் காரணமாக ஏனாம் பகுதியில் வரும் 29 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏனாம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் 29 ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications