Cyclone REMAL வங்கக் கடலில் உருவாகிறது தீவிர புயல் ரெமல்! எங்கு எப்போது கரையை கடக்கும்?
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறுவதாகவும் அதற்கு ரீமால் (REMAL) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிவிட்டது.

இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும். இது தீவிர புயலாக மாறும். இந்த தீவிர புயலுக்கு REMAL (ரெமல்) என பெயரிடப்பட்டுள்ளது. இது வரும் 26ஆம் தேதி வங்கதேசத்தை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதனால் வரும் 26 ஆம் தேதி வரை மீனவர்கள் சம்பந்தப்பட்ட கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அது போல் மக்களும் நீர் வீழ்ச்சி, மலை பிரதேசங்கள் கொண்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் தெற்கு கேரளா, அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழையும், வருகிற 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும்.
மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ஆம் தேதி மாலை நிலவும். இதனால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் வரும் 25 ஆம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான், தெற்கு வங்கக் கடல், குமரிக் கடலின் சில பகுதிகளில் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் பருவமழை படிப்படியாக தீவிரமடைந்து வருகிறது. இதனால் தெற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், மாலத்தீவின் பல பகுதிகள், குமரிக் கடல், தெற்கு வங்கக் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள், அந்தமான் கடல் பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது.
வழக்கமாக கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு மே 31 ஆம் தேதி முன் கூட்டியே தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications