Ditwah U-Turn: சென்னை- புதுவை அருகே கரையை கடக்காமல் 'யூடர்ன்' போட்ட டிட்வா! 9ஆம் தேதி வரை மழை! வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் சென்னை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புதுவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், சென்னை எண்ணுார், ஹிந்துஸ்தான் பல்கலை ஆகிய இடங்களில் தலா, 15 செ.மீ., மழை பெய்துள்ளது.

அடுத்தபடியாக, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, 13; புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் தலா, 12; சோழிங்கநல்லுார் சத்தியபாமா பல்கலை, மணலி புதுநகர், சென்னை விஐடி பல்கலை, திருக்கழுக்குன்றம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, இலுப்பூர் ஆகிய இடங்களில் தலா, 11 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
தொடர்ந்து, வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்த்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. அதன்பின், 'யு டர்ன்' அடித்து, இது வந்த பாதையிலேயே தெற்கு, தென்மேற்கு நோக்கி நேற்று நகர துவங்கியது. நேற்று பகல் நிலவரப்படி, புதுச்சேரி நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்துள்ளது. இன்று, இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக, மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 9 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் நேற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் இன்றும் இரு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் செங்கல்பட்டில் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications