Depression: வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 3 நாட்கள் கனமழை பிச்சு உதறும்.. டெல்டா வெதர்மேன்
சென்னை: வங்கக் கடலில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்த நிலையில், இது மேலும் வலுப்பெற்று வரும் 15 ஆம் தேதி இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் பனிப்பொழிவு அதிகரிக்கும் எனவும் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழை பெய்து வந்தது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வந்தது. வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவான அர்னாப் மற்றும் முரசு புயல்களால் ஆந்திராவில் கனமழை வெளுத்து வாங்கியது. தமிழகத்திலும் இதுவரை இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 3 நாள் கனமழை பிச்சு உதறும்
எனினும் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று தீபாவளி அன்றும் சென்னை உள்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு கடல் பகுதியில் காற்று சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக ஈரப்பதமான கீழைக்காற்று டெல்டா & தென் கடலோர பகுதிகள் ஊடாக ஊடுருவுகிறது.
3 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்
இதனால் இன்று திங்கட்கிழமை முதல் 11 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களான காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒரிரு இடங்களில் கனமழையும் பதிவாகும்.
கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி போன்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
சென்னையில் பனி அதிகரிக்கும்
சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழையின் தாக்கம் குறைந்து இரவு நேர பனிப்பொழிவு அதிகரிக்கும். காவிரி டெல்டா & தென் மாவட்டங்களில் பெய்யக்கூடிய மழை வேளாண் பணிகளுக்கு சாதகமாக அமையும். பயிர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மழையாக அமையும்.
மீனவர்களுக்கான முக்கிய அறிவுப்பு:
தமிழக மீனவர்கள் நவம்பர் 13 ஆம் தேதி வரை கடலுக்கு செல்லலாம். நவம்பர் 13 ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்புவது போல திட்டமிட்டுக்கொள்ளுங்கள். நவம்பர் 14 முதல் 20 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.. நவம்பர் 15 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்பதால் முன்னெச்சரிக்கையாக திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழகம் நோக்கி வருமா புயல்?
ஏற்கனவே வானிலை ஆய்வு மையமும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 13 ஆம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும், இது அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும், வரும் 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் கணித்து இருந்தது.
அதே நேரம் அக்டோபர் மாதத்தில் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் ஆந்திராவில் கரையைக் கடக்கக்கூடும் என்றும், நவம்பர், டிசம்பர் மாதத்தில் புயல் உருவானால் தமிழக பகுதிகளில் தான் கரையை கடக்கும் என வானிலை மைய இயக்குனர் துரை கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது. இதனால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் சென்னையில் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.




Click it and Unblock the Notifications
