தமிழ்நாட்டில் திருவாரூர், நாகை உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டிலேயே நேற்று அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழை என்பது சென்னையில் தான் பெய்திருந்தது. சென்னை பாரிமுனை மற்றும் மதுரவாயல் பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியிருந்தது. இன்று காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி நாளில் நல்ல மழை பெய்திருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெயதுள்ளது. அதேபோல் தூத்துக்குடி, தேனி உள்பட பல்வேறு தென்மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்திருக்கிறது. முரசு புயல் முடிந்த போதிலும், வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. அத்துடன், தமிழக தென் மாவட்டங்கள் வழியாக, மத்திய கிழக்கு அரபிக்கடல் வரை, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் நிலவுகிறது
இதனால், தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், தேனி , தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மதுரை, துாத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தின் பொதுவான வானிலையை பொறுத்தவரை இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம்.
நேற்று காலை 8:30 வரையிலான 24 மணி நேரத்தில், சென்னை பாரிமுனை மற்றும் மதுரவாயல் பகுதிகளில் அதிகபட்சமாக 9 செ.மீ., மழை பெய்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, சென்னை நுங்கம்பாக்கம், தண்டையார்பேட்டை மற்றும் துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியிருக்கிறது" இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications
