மாமதுரையே மிதக்குது! கருணை காட்டாத மழை.. தத்தளிக்கும் மக்கள்! களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்!
மதுரை: கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக மதுரையில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மிதக்கின்றன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி மதுரையில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
மதுரை மாநகரில் கடந்த சில தினங்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் தொடங்கி சில மணி நேரம் மிக கனமழை பெய்தது. குறிப்பாக சில பகுதிகளில் வெறும் 15 நிமிடங்களில் 45 மில்லி மீட்டர் மழை பெய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக மழை பெய்ததன் காரணமாக மதுரை பி.பி.குளம் அருகே உள்ள தாழ்வான பகுதியான முல்லை நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மதுரை பிபி குளம் முல்லை நகர் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் ஆலங்குளம் கண்மாயில் நீர் வரத்து அதிகமாகி உபரிநீர் வெளியேறி மழை நீரோடு சேர்ந்து முல்லை நகர் குடியிருப்பு பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக முல்லை நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து வெள்ளம் மற்றும் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி, மதுரை ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.
இதற்கிடையே மதுரையில் கனமழை பாதிப்பு மற்றும் மீட்பு நிவாரண பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி மதுரையில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், அங்கு நிலவும் சூழல் மற்றும் அரசு தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிய, காணொளிக் காட்சி வாயிலான ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மை செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் முழுமையாக வடிந்துவிட்டது என்று கூறிய அதிகாரிகள், தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் எடுத்துக் கூறினர்.
தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை, தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், உணவு - தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்திட வேண்டும் என்றும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு மழைத் தொடர்பாக மதுரை மக்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண ஆலோசனைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.












Click it and Unblock the Notifications