சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம்- அரசு முன்னெச்சரிக்கைகளை மட்டும் பின்பற்றுங்க.. முதல்வர் ஸ்டாலின்
சென்னை: வடகிழக்கு பருவமழையை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொய் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள வழங்கப்பட்ட அறிவுரைகள் என்னென்ன என்பதையும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வழி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொய் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு பருவமழையை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் பரப்பும் பொய் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ளுங்கள்.
* மின் விநியோகம் சீராக இருக்க, கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.
* பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்குச் சிறப்பு முன்னுரிமை அளித்துப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* மீட்புப் பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள், JCB இயந்திரங்கள் உள்ளிட்டவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.
* பொது சுகாதாரத்தைப் பேணிக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
* 15.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
* 15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
* தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
* வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்புப் படகுகள் இன்றே நிலைநிறுத்தப்பட வேண்டும்.
*மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்குச் சென்று, ஆயத்தப் பணிகளையும், மீட்பு, நிவாரணப் பணிகளையும் மாவட்ட நிருவாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
* மெட்ரோ இரயில் மற்றும் பறக்கும் இரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
* அத்தியாவசியப் பொருட்களின் விலை உயராமல் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
* பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
* ரொட்டி, குடிநீர் பாட்டில்களை நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்குச் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* போக்குவரத்து பாதிக்கப்படும்போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications