கனமழையால் தேனி, நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.. மதுரையில் 2 வருவாய் கோட்டங்களுக்கு லீவ்
மதுரை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு தென்மாவட்டங்களில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இன்றும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேனி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தான் வங்கக்கடலில் உருவான டானா எனும் தீவிர புயல் நேற்று வடக்கு ஒடிசாவின் பிதர்கனிகா மற்றும் தாமரா பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை கொட்டியது.
அதிர்ஷ்டவசமாக தமிழகத்தில் இந்த புயலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனாலும் கூட வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் தென்தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் நேற்றைய தினம் காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணிநேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக இரவில் வெறும் 15 நிமிடங்களில் 4.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் செல்லூர் உள்பட பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் வீடுகள், மருத்துவமனைகள், கடைகளுக்குள் நுழைந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
அதேபோல் இன்றும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தை பொறுத்தவரை தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை வடக்கு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின் எக்ஸ் பக்கத்தில், ‛‛திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 26.05.2024 அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 26.10.2024 அன்று சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications