எல் நினோவிற்கு குட் பை... காவிரி பிரச்சினை தீரும்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: எல் நினோ காலம் முடிவுக்கு வந்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரியில் தண்ணீர் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும் பிரதீப் ஜான் நல்ல செய்தி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் சீசனில் எல் நினோவின் 70% நிகழ்தகவு இருப்பதாகவும், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் பருவத்தில் 80% ஆக உயரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. எல் நினோவை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. கவனமாக கையாண்டால் எல் நினோவில் இருந்து தப்பிக்கலாம் என வானிலை ஆய்வாளர்களும் பொருளாதார வல்லுநர்களும் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஆண்டு ஒரு பக்கம் வெள்ளம் மற்றொரு பக்கம் வறட்சி என்ற நிலையில்தான் தென்மேற்கு பருவமழை காலம் கடந்து போனது.
கடந்த மே மாதம் வரை மேட்டூர் அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்தது. தென்மேற்கு பருவமழை அபரிமிதமாக பெய்தால் மட்டுமே காவிரியில் நீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் சரியாக பெய்யாத காரணத்தால் காவிரியில் நீர் வரத்து இல்லாமல் போனது.

மழை பொழிவு குறைவுக்குக் காரணம் எல் நினோ என்று கூறப்பட்டது. எல் நினோ சில நேரங்களில் வறட்சியையும் சில நேரங்களில் வெள்ளத்தையும் கொடுக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பொழிவு சரியாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை இந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் நிரம்பவில்லை. 40 அடிக்கும் கீழே சரிந்தது. அணை நீர் திறப்பு நிறுத்தப்பட்டதை அடுத்து படிப்படியாக உயர்ந்து 65 அடி வரை எட்டியது தற்போது குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் பங்கு தண்ணீரை தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. இந்த ஆண்டு கர்நாடகா வறட்சியை சந்தித்துள்ளதாக அங்குள்ள ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் எல் நினோ முடிவுக்கு வந்து விட்டதாக பதிவிட்டுள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான். அவர் தனது எக்ஸ் வலைத்தள பதிவில் எல் நினோவிற்கு குட் பை என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் காவிரியில் தண்ணீர் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்று பதிவிட்டுள்ளார் பிரதீப் ஜான். வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் மழை அபரிமிதமாக பெய்து எங்கும் பெருவெள்ளம் சூழ்ந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பின. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எல் நினோ காலம் முடிவுக்கு வந்து விட்டதாக கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
அவரது பதிவுக்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது ரொம்ப நல்ல செய்தி, தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல கர்நாடகாவிற்கும் தான் என்றும் பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.
உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு இது ஒரு நல்ல செய்தி. தமிழ்நாட்டிற்கு மழை அபரிமிதமாக பொழிய வேண்டும் என்று வருணபகவானை பிரார்த்தனை செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் மற்றொரு நெட்டிசன்.












Click it and Unblock the Notifications