பேசின் பிரிட்ஜில் வடிந்த வெள்ளம்.. சென்ட்ரலுக்கு தடையின்றி வரும் ரயில்கள்! பயணிகள் நிம்மதி
சென்னை: கனமழை காரணமாக நேற்று பேசின் பிரிட்ஜ் பகுதியில் வெள்ளம் தேங்கியிருந்தது. இதனால் சென்ட்ரல் நோக்கி வரும் ரயில்கள், திருவள்ளூரிலும், ஆவடியிலும், அரக்கோணத்திலும் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இன்று வெள்ளம் வடிந்திருப்பதால் ரயில்கள் தடையின்றி சென்ட்ரல் வருகின்றன. எனவே பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, சென்னையை ஒட்டி நகர்ந்து வந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் தொடங்கிய மழையானது, நேற்று இரவு வரை அடி வெளுத்து வாங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் தேங்கியது.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு என்ட்ரி பாயிண்ட்டாக இருக்கும் பேசின் பிரிட்ஜ் பகுதியிலும், அங்கிருந்து சென்ட்ரல் செல்லும் தண்டவாள பாதையிலும் மழைநீர் தேங்கியது. இதனால் ரயில்கள் சென்ட்ரலுக்குள் நுழைய முடியாமல் தவித்தன. கோவை, எர்ணாகுளம், திருவனந்தபுரம், பெங்களூர், மைசூரு, ஆந்திரா, தெலங்கானா, மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் ரயில்கள் அனைத்தும் பேசின் பிரிட்ஜை கடந்துதான் சென்ட்ரல் செல்ல வேண்டும். ஆனால் வெள்ளம் தேங்கியதால் நேற்று சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல, சில ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
நேற்று சென்னையிலிருந்து மைசூர் செல்லும் வண்டி எண் 12685 ரயில் சென்ட்ரலுக்கு பதிலாக பெரம்பூரிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டிருக்கிறது.
சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதி செல்லும் வண்டி எண் 16203 ரயில், ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மும்பையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வண்டி எண் 12163 லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ஆவடியுடன் நிறுத்தப்பட்டிருந்தது. அதேபோல சென்னையிலிருந்து புறப்படும் வண்டி சென்ட்ரலுக்கு பதில் ஆவடியிலிருந்து புறப்பட்டிருக்கிறது.
சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் வண்டி எண் 12623 ரயில், சென்னை கடற்கரையிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டிருக்கிறது.
மங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் வண்டி எண் 22638 வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு செல்லாமல் திருவள்ளூருடன் நிறுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல சென்னை சென்ட்ரலிலிரந்து மங்களூரு செல்லும் வண்டி எண் 12601 சென்ட்ரலுக்கு பதில் ஆவடியிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சென்ட்ரல் நோக்கி வரும் பல ரயில்கள் அரகோணத்திலும், திருவள்ளூரிலும், பெரம்பூரிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டாலும், புறநகர் மின்சார ரயில் சேவை வழக்கம் போல இயங்கியது. எனவே, பயணிகள் அதில் பயணித்து நீண்ட நேரத்திற்கு பின்னர் வீடு சென்று சேர்ந்தனர்.
இந்நிலையில் இன்று பேசின் பிரிட்ஜ் பகுதியில் வெள்ளம் வடிந்ததால், ரயில்கள் வழக்கம்போல சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் நுழைகின்றன. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications