கோடைகாலத்திற்கு முன்பே உக்கிரம்.. கரூரை பதம் பார்த்த வெயில்! அதிகபட்ச வெப்பம் பதிவான இடங்கள்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று அதிகபட்சமாக கரூரில் 100 டிகிரியை வெப்பம் தொட்டுள்ளது. இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் வெயில் வாட்டி வதைத்துள்ளது. அதிகபட்ச வெப்பம் பதிவான இடங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. கத்திரி வெயில் தொடங்கிவிட்டதோ என நினைக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாக உள்ளது. கடந்த வாரம் வரை தென்காசி, நெல்லை தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், தற்போது அங்கும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னையில் சொல்லவே வேண்டாம். பகல் முழுக்க வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சும் அளவுக்கு நிலைமை உள்ளது.

இன்றைய வெயில் அளவு
சென்னையில் தான் இப்படி என்றால் உள்மாவட்டங்களிலும் வெயில் உக்கிரம் தாண்டவம் ஆடி வருகிறது. பகல் வேளைகளில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள், இளநீர் கடைகளுக்கும் சாலையோர ஜூஸ் கடைகளிலும் நின்று இளைப்பாறுவதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் இன்று பதிவான வெப்பத்தின் அளவு குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக கரூரில் வெயில் சதம் அடித்துள்ளது. ஈரோட்டில் 99 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கரூர் 101
ஈரோடு 99
திருப்பூர் 98
கோவை 98
சேலம் 98
மதுரை 97
தருமபுரி 97
தஞ்சை 97
வேலூர் 96
நெல்லை 94
திருச்சி 95
திருத்தணி 93 டிகிரி செல்சியஸ் என வெயில் வாட்டி வதைத்துள்ளது.
மிக கனமழைக்கான எச்சரிக்கை
எனினும் நாளை ஒருநாள் மட்டுமே தென் மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என்றும் அதன்பிறகு மழை தான் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் அதாவது 11 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் மார்ச் 10 ஆம் தேதி நாளை திங்கள்கிழமை வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும். 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரலாம். மார்ச் 11 ஆம் தேதிக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வெப்ப நிலை சற்று குறையத் தொடங்கும். உள் தமிழ்நாடு, அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 11 ஆம் தேதி 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
4 மாவட்டங்கள்
குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. அதாவது மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் 12 செமீ முதல் 20 செமீ மழை வரை பதிவாகக் கூடும்" என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications