நைட் ஃபுல்லா மழை கொளுத்த போகுது.. 11 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. திருவள்ளூருக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்தில் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை (tn rain alert) வெளுத்து வாங்கும் என்றும், காஞ்சிபுரம், தஞ்சை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. நேற்று முன் தினமும் தமிழகத்தில் மழை பல்வேறு இடங்களில் பெய்தது. வட மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்தது. ஆனால் இன்று பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

11 மாவட்டங்களுக்கு அலர்ட்
கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக அடுத்த ஒரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சை, தென்காசி, கோவை மற்றும் நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரா பகுதிகளை கடக்கக் கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அடுத்த ஒரு வார அப்டேட்
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வரும் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications