”நைட் ஃபுல்லா மழை விடாது..” தமிழகம் முழுக்க 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் விட்டு விளாசப் போகுது
சென்னை: தமிழகம் முழுக்க அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி என 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு மழை விடாது எனவும், அவசியம் இன்றி வெளியே வராதீர்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மழையும் பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்ததால் நேற்றும் இன்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

16 மாவட்டங்களில் மழை வெளுக்கும்
இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று இரவும் மழை விடாது என தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம். அடுத்த 2 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 16 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தேவையின்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று 27 ஆம் தேதி ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலையில் தெற்கு ஒரிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, காலை 8.30 மணி அளவில் சட்டீஸ்கர் பகுதிகளில் நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கோவைக்கு ரெட் அலர்ட்
இதன் காரணமாக இன்று வியாழக்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 3 ஆம் தேதி வரை
29-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 30-08-2025 முதல் 03-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையிலும் மழைக்கு சான்ஸ்
சென்னையில் இன்று வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு செமீ:
* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 6,
* சோலையார் (கோயம்புத்தூர்) 5,
* உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 4.
* சின்கோனா (கோயம்புத்தூர்). அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 3,
* பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), மேல் பவானி (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), ஆழியார் (கோயம்புத்தூர்). முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 2 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications