நீடிக்கும் கனமழை.. நிரம்பிய வீராணம் ஏரி.. சென்னைக்கு குடிநீர் பிரச்சினை இல்லை
கடலூர்: தொடர் கனமழையால் நிரம்பி வழிகிறது வீராணம் ஏரி. இன்னும் ஓராண்டுக்கு சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை என்கின்றனர் நீர்வளத்துறை அதிகாரிகள்.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் சோழர்களால் வெட்டப்பட்ட வீராணம் ஏரி அமைந்துள்ளது. இது 11 கிலோமீட்டர் நீளமும், நான்கு கிலோமீட்டர் அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அது மட்டுமின்றி சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படும். சென்னை மட்டுமல்லாது கடலூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது.
காவிரி கொள்ளிடத்தில் இருக்கும் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருகிறது. சென்னையில் இருந்து 235 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரியிலிருந்து சென்னைக்கு ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்தின்றி காணப்பட்டது. கடந்த அக்டோபர் மாத இறுதி வரை வீராணம் ஏரி தண்ணீர் இன்றி காணப்பட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது.
தென்மேற்கு பருவமழை ஏமாற்றினாலும் வடகிழக்கு பருவமழை கைவிடவில்லை. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான ஜெயங்கொண்டம் அரியலூர், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியில் தற்போது 46 அடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஏரிக்கு 61 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஏரி முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில், ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதால் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும்.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாலும், நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் கடலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும், சென்னை வாசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீராணம் ஏரி மட்டுமல்லாமல் தொடர் மழையால் சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இன்னும் சில ஆண்டுகளுக்கு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் நான்கு மாவட்டங்களில் உள்ள குடிநீர் ஏரிகள் நிரம்பி வருகின்றன. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080மி.கனஅடி ஆகும். இதில் 673மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 186 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி ஆகும். இதில் 2726மி.கனஅடி தண்ணீர் தற்போது உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications