மழையால் மகிழும் திருநெல்வேலி.. அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லையில் கொட்ட போகுது.. வானிலை மையம் நியூஸ்
சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், தற்போது இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது திருநெல்வேலி மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
கோடை காலம் ஆரம்பமாகிவிட்டாலும், கடந்த 2 நாட்களாகவே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.. நேற்றைய தினமும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்திருந்தது.

தொடர் மழை: அதேபோல, இன்று அதாவது 16ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் நாளை ஏப்ரல் 17ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் அறிவிப்பு: இதனிடையே, திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் அலர்ட் வெளியாகி உள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 19 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது..
கூடுதல் மகிழ்ச்சி: ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏற்கனவே வானிலை மையம் அலர்ட் தந்திருந்த நிலையில், இன்றைய தினம் இடியுடன் கூடிய மழைக்கான அறிவிப்பானது, கூடுதல் மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications