ஸ்தம்பித்த தென் மாவட்டங்கள்.. பேருந்து இல்லாமல் முடங்கிய மக்கள்.. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்
திருநெல்வேலி: கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடாமல் கொட்டி வரும் கனமழையால் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் முடங்கியுள்ளனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி செல்லும் ரயில்கள் அனைத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழை என்று சொல்வது போல நூற்றாண்டுகளில் காணாத மழையை தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் சந்தித்து வருகின்றன. இடைவிடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பேருந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், "திருநெல்வேலி மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக சில இடங்களில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. மழை நின்றதும் மின்சாரம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வரலாறு காணாத மழை என்பதால் சில இடங்களில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ள நீர் கால்வாயில் 300 கன அடி முதல் 3000 கன அடி வரை திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி வரை நீர் செல்லும். தற்போது 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாமுக்கும் தனி தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் செவ்வாய் கிழமை வரை மழை இருக்க கூடும். மாவட்டம் முழுதும் 20 முகாம்களில் 985 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 245 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை, கொடைரோடு ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. விடாமல் மழை கொட்டி வருவதால் பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications