அடித்து பெய்யப்போகும் கனமழை.. 13 மாவட்டங்களுக்கு பறந்த வார்னிங்! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஜூலை முதல் வாரம் வரை தமிழகத்தில் வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. எனவே வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை மத்திய இந்தியா வரை உள்ள நிலப்பரப்புக்கு ஆண்டின் மொத்த மழைப்பொழிவில் 70%ஐ கொடுக்கும். எனவே இதனை நம்பி கோடிக்கணக்கான விவசாயிகள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை 92% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 150.6 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 288.9 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1043.5 மி.மீ, கோவையில் 773.4 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 21.9 மி.மீ, நாகப்பட்டினத்தில் 77.5 மி.மீ என மழை பதிவாகியுள்ளது.
அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்து வந்தன. உள் தமிழக மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் போதுமான அளவுக்கு உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. எனவே கடந்த சில நாட்களாக அங்கிருந்து மேட்டூருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்திருந்தது. தற்போதைய நீர் வரத்து குறைந்திருக்கிறது. அதாவது இன்று காலை நிலவரப்படி கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு 10,000 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் போக்கி மதகுகளில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது
இப்படி இருக்கையில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
16ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
17ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications