ரெட் அலர்ட்.. உஷாரா இருங்க மக்களே..! 6 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
சென்னை: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நவம்பர் 29 ஆம் தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் அதிகன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தி பகுதியில் இன்று புயல் உருவாகும் என இந்திய வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி மலாக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் அருகே புயல் உருவாகி உள்ளது. இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து இந்த 'சென்யார்' புயல் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக மலேசியா மற்றும் இந்தோனேசிய பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த புயலால் நேரடி பாதிப்பு கிடையாது.
வடகிழக்கு இந்தோனேசியாவில் புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் நகரும் என்றும், 48 மணி நேரத்தில் கிழக்கு நோக்கி மேலும் நகர்ந்து முழுவதுமாக வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று உருவான சென்யார் 48 மணிநேரத்தில் முழுவதுமாக வலுவிழக்கும்.
இதற்கிடையே, குமரி கடல் பகுதிக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கும் நிலையில், இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 28ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
29ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் 30 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நவம்பர் 29 ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் அதிகன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications