முடிவுக்கு வந்தது கனமழை.. இன்று முதல் வெயில் அதிகரிக்க வாய்ப்பு! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொங்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்றுடன் கனமழை முடிவடைந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

07-07-2025 முதல் 11-07-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3* உயரக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (06-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்படடிருக்கிறது.
கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்திருந்தது. நேற்று நீர் வரத்து 50,000 என இருந்த நிலையில், இன்று 45,000 என நீர் வரத்து குறைந்திருக்கிறது. அணையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும், நீர் வெளியேற்றம் மொத்தமாக 40,500 கன அடியாகவும் உள்ளது.
மறுபுறம் வட மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட பகுதியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கும், உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இனி வரும் நாட்களில் வெயில் தீவிரமாக இருந்தாலும் இந்த மாத முடிவில் மீண்டும் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications