சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. விமான போக்குவரத்து பாதிப்பு.. சாலைகளில் மிதந்து சென்ற வாகனங்கள்
சென்னை: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மழையால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைநகர் சென்னையில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ்ந்து சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. அண்ணா நகர், அமைந்தகரை, கொரட்டூர், பாடி உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது.மேலும், விமான நிலையம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளிலும் கனமழை பெய்தது. கோடம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பூவிருந்தவல்லி பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.இதேபோல, வடசென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி, திரு.வி.க.நகர், திருவொற்றியூர், ராயபுரம், தண்டையார்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது.
விடிய விடிய இடி மின்னலுடன் பெய்த கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் வழக்கம் போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு கீழே 2 அடி ஆளத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கத்திப்பாரா பாலத்திற்குக் கீழே செல்ல வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மீனம்பாக்கம் பகுதியில் நள்ளிரவு முதல் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. பலத்த மழை காரணதாக விமானங்கள் தரை இறங்குவதிலும் புறப்படுவதிலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications