வெளுத்து வாங்கும் கனமழை.. நெல்லை உட்பட 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி: கனமழை காரணமாக திருநெல்வேலி உட்பட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார். இன்று அதிகாலை முதல் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. எனவே, தென் மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. மழை இதே போல தொடர்ந்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் உருவாகும். எனவே, பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி
திருநெல்வேலி
தென்காசி
ராமநாதபுரம்
திருவாரூர்
என 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளியுடன் சேர்த்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தவிர காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. விருதுநகர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கனமழை காரணமாக தென்காசியில் குற்றாலம் அருவியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. எனவே அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரியில் கனமழை காரணமாக திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கான படகு போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல தேனி கும்பக்கரை அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் நகரில் 10 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
பரமகுடியில் 8 செ.மீ.,
வாலிநோக்கம் 7.3 செ.மீ.,
கடலாடி 5.5 செ.மீ.,
திருச்செந்தூரில் 4.5 செ.மீ.,
வைப்பாறு 4 செ.மீ.,
குலசேகரப்பட்டிணம் 3.3 செ.மீ.,
தூத்துக்குடியில் 4.5 செ.மீ.,
திருத்துறைப்பூண்டியில் 5 செ.மீ.,
திருப்பூண்டியில் 13.4 செ.மீ.,
திருக்குவளையில் 11 செ.மீ.,
வேதாரண்யம் 10 செ.மீ.,
வேளாங்கண்ணி 8 செ.மீ.,
கோடியக்கரையில் 15 செ.மீ., (2 மணி நேரத்தில் 10 செ.மீ.,) என மழை பதிவாகியுள்ளது












Click it and Unblock the Notifications