விடிய விடிய பெய்த நான்-ஸ்டாப் மழை.. இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
சென்னை: இன்று காலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது. அதேபோல், இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கொட்டி வருகிறது. அடையாறு, கோட்டூர்புரம், ராயபுரம், கிண்டி, தரமணி, சாந்தோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல் செங்குன்றம், பூந்தமல்லி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இடைவிடாத கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து உள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.11.2023 முதல் 30.11.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications