நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மக்களுக்கு எவ்வளவு நிவாரணம்? ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு?
திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விரைவில் வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் இன்று முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி சென்ற பின் வெள்ள நிவாரண தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். எவ்வளவு தொகை அறிவிக்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கிட ரூ.1487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்

வெள்ள நிவாரண தொகை: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (17.12.2023) சென்னை, வேளச்சேரி, சக்தி விஜயலட்சுமி நகர், நியாய விலைக் கடை அருகில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கும் பணியினை பயனாளிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரும் மழைப்பொழிவின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல் வெள்ளம்: "மிக்ஜாம்" புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 9.12.2023 அன்று அறிவிப்பினை வெளியிட்டார்.
நிவாரணம் வழங்கப்படும்: இந்த நிவாரணத் தொகை, சென்னை மாவட்டத்தின் அனைத்து வட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள், ஆகிய பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக ரூ.6000/- நிவாரணத் தொகை இன்று முதல் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் 13 இலட்சத்து 72 ஆயிரத்து 509 குடும்ப அட்டைதாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 6 இலட்சத்து 8 ஆயிரத்து 726 குடும்ப அட்டைதாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 இலட்சத்து 12 ஆயிரத்து 952 குடும்ப அட்டைதாரர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 இலட்சத்து 31 ஆயிரத்து 149 குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறுவர். இதற்கென தமிழ்நாடு அரசால் 1486 கோடியே 93 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள் வெள்ளம்: தற்போது தென் மாவட்டங்களும் மிக மோசமான வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு தற்போதுதான் வடிந்து வருகிறது.
இந்த நிலையில்தான் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு விரைவில் வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் இன்று முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி சென்ற பின் வெள்ள நிவாரண தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். எவ்வளவு தொகை அறிவிக்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.,
பெரும்பாலும் சென்னையில் கொடுக்கப்பட்ட அதே ரூ. 6000 இங்கே கொடுக்கப்படும் என்கிறார்கள். உயர் நீதிமன்ற ஆலோசனைப்படி பெரும்பாலும் ரேஷன் கடை இல்லாமல்.. வங்கி வழியாக இந்த பணம் கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் கொடுத்ததை விட குறைவாகவோ.. அதிகமாகவோ கொடுத்தால் தேவைற்ற விவாதம் ஏற்படும் என்பதால்.. அதே ரூ. 6000 மட்டுமே நிவாரணமாக கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications