வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அடுத்த 4 நாட்கள் தமிழகத்தில் மழை நிற்காது! வந்த புதிய அலர்ட்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் அடுத்த நான்கு நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. தென்தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்குப் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (1-10-2025) காலை 8.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 11.30 மணியளவில் வலுப்பெற்று, அதே பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலவி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்), இன்று (02-10-2025) காலை மேலும் வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில், கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 160 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கபட்டினத்தில் இருந்து கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்தில் இருந்து கிழக்கு - வடகிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், பாராதீப்பில் இருந்து தெற்கு-தென்மேற்கே 280 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில், கோபல்பூர் மற்றும் பாராதீப்பிற்கு இடையே இன்று இரவு கரையை கடக்கக்கூடும்.
மழை கொட்டும்
இதனால் இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை இருக்கு
அக்டோபர் 4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் அக்டோபர் 5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் மழை
அக்டோபர் 6ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்டோபர் 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
நாளை (03-10-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications