அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது!
சென்னை: அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது வலுவிழந்திருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த 2009ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ரொம்பவும் சீக்கிரமாகவே தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் அரபிக்கடலில் வானிலை மாற்றம் நடந்திருந்தது. அதாவது மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது கடந்த 22ம் தேதி கொங்கன்-கோவா கடல் பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருந்தது.
இது கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி நகர்ந்து வந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயல் சின்னமாக வலுப்பெறக்கூடுமா? என்று அச்சம் எழுந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை மறுத்திருந்தது. புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே வலுவிழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வானிலை ஆய்வு மையம் சொன்னதை போலவே, இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மும்பையின் ரத்தனகிரி-டபோலி இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது காற்றுழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வு பகுதியாகவும், பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் வலுவிழந்துள்ளது.
இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று இரவு 1 மணி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, ஈரோடு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
என்னதான் அரபிக்கடலில் நிலைப்பெற்றிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்திருந்தாலும், வங்கக்கடலில் பின்னாடியே காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாக தொடங்கியுள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால் நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.28ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications