தமிழக கடற்கரையை 25 கி.மீ. தொலைவு வரை நெருங்கும் டிட்வா புயல்! 2 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!
சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம். அதாவது அந்த பகுதிகளில் நாளை 21 செ.மீ.ருக்கு மேல் மழை பொழிவு இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக கடற்கரையை 25 கி.மீ. தொலைவு வரை நெருங்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்.
சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு
மிக கனமழை பெய்யும்.
வடக்கு- வடமேற்கு நோக்கி நகரும் டிட்வா புயல் தமிழக கடற்கரையை 25 கி.மீ. தொலைவு வரை நெருங்கும். இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை 60 கி.மீ. தூரம், 50 கி.மீ. தூரம், 25 கி.மீ. தூரம் என்ற தொலைவுகளில் நெருங்கும். தமிழக கடற்கரையையொட்டி பயணித்து ஆந்திர கடற்கரைக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிட்வா புயலானது நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு தென் கிழக்கே 140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது போல் சென்னைக்கு தென் கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 80 கி.மீ. தூரத்திலும் காரைக்காலுக்கு தென் கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் புதுவை கிழக்கில் 280 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், நாகை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்ட கடலோரங்களில் கடல் அலைகள் அதிகபட்சமாக 3.9 மீட்டருக்கு உயரும். அதாவது நாகையில் அதிகபட்சமாக 3.9 மீட்டரும், காஞ்சிபுரத்தில் 3.1 மீட்டரும், விழுப்புரத்தில் 3.3 மீட்டரும், கடலூரில் 3.7 மீட்டரும் கடல் அலைகள் உயரும் என்று பெருங்கடல் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் கணித்துள்ளது.
கொடைக்கானல் சுற்றுலா தலம் மூடல்
டிட்வா புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் சாரல் மலை காரணமாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று ஒரு நாள் மூடப்படுகிறது. குணா குகை, பைன் மரக்காடுகள், பாறை சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவை இன்று ஒரு நாள் மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது. கொடைக்கானலில் படகுச் சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications