வங்கக் கடலில் ‘நங்கூரம்’.. அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெறும்.. மழை வெளுக்கும்: வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். ஆந்திர கடலோரப் பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுவடையக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பாக புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (நவம்பர் 16) வலுவடைய வாய்ப்பு உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து, இது வடகிழக்கு திசையில் திரும்பி, நவம்பர் 17ஆம் தேதி ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும்.
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள மேல் காற்று சுழற்சியானது நடுத்தர வெப்பமண்டல நிலைகள் வரை நீடிக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள சூறாவளி சுழற்சியில் இருந்து மேற்கு மத்திய மற்றும் கிழக்கு மத்திய மற்றும் தெற்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதிகளில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 கி.மீ வரை நீண்டுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications