அடுத்த 24 மணி நேரத்தில்.. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.. இந்திய வானிலை மையம்
சென்னை: வட வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்று என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் தென்மேற்கு பருவமழை மூலம் அதிக மழை பெறுகிறது. வடகிழக்கு பருவமழையால் அதிக மழையை பெறும் மாநிலம் தமிழகம் மட்டுமே. தென்மேற்கு பருவமழை தான் மொத்த நாட்டிற்கும் அதிக மழைப்பொழிவை கொடுக்கிறது. வழக்கமாக இந்தியாவில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்குப் பருவமழை காலம் ஆகும்.

நடப்பு ஆண்டில் கடந்த மே 19 ஆம் தேதி அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன்பிறகு 31 ஆம் தேதி முதல் கேரளா, வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்து இருந்தது. அதன்படியே, தென்மேற்கு பருவமழையால் நாடு முழுக்க மழை வெளுத்து வாங்கி வருகிறது..
இந்த நிலையில், வட வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 2 நாளில் மேற்கு வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்று என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர ஆந்திர பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் இருப்பதால் கடலோர ஆந்திரா மற்றும் ராய்லசீமா ஆகிய வட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளது.
அதேபோல ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் செய்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தானில் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் தெற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் 28 ஆம் தேதிக்கு பிறகு மழையின் தீவிரம் குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications