சென்னைக்கு வந்த ‛வார்னிங்’.. மழைநீரை கடல் உள்வாங்குகிறதா? மெரினாவில் இப்போது என்ன நிலைமை?
சென்னை: சென்னையில் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதோடு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னையை நெருங்கி வருவதால் இன்று மாலை முதல் நாளை வரை சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் மழைநீரை கடல் உள்வாங்குகிறதா? மெரினா முகத்துவாரத்தின் நிலை என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் புயல் காரணமாக சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் தற்போதே சென்னைக்கு வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது
சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் நேற்று மாலை இதற்கு முன்னோட்டமாக நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் சற்று நின்ற மழை மீண்டும் 9 மணிக்கு பிறகு வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையின் பல சாலைகளில் மழை வெள்ளம் முழங்கால் உயரத்துக்கு தேங்கி உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீரை விரைவாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக சென்னையில் கனமழையின்போது பெருக்கெடுக்கும் நீர் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக சென்னை மெரினாவில் உள்ள கடலை சென்றடையும். மெரினா முகத்துவாரம் வழியாக கடலில் மழைநீர் சேரும். இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு கடல் மழைநீரை உள்வாங்காத பட்சத்தில் மழைநீர் வெளியேறாமல் அப்படியே குடியிருப்புகளில் தேங்கும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் மழைநீர் தேங்கி நிற்க மழைநீரை உடனடியாக கடல் உள்வாங்காதது தான் காரணமாகும்.
இந்நிலையில் தான் இன்று சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள மெரினா முகத்துவாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகத்துவார பகுதிகள் பற்றி அவர்களிடம் எடுத்து கூறினர். அதோடு மழைநீர் முகத்துவாரம் வழியாக கடலில் சென்று சேருவதற்கு வசதியாக 2 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூர்வாறும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினர்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து மழை பெய்து வருவதால் கூடுதலாக இன்னொரு பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீர் மெரினா முகத்துவாரம் வழியாக கடலுக்குள் தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். இதை கேட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்கு தடையின்றி பணிகள் நடைபெற வேண்டும். மழைநீர் சுணக்கமின்றி முகத்துவாரம் வழியாக கடலுக்குள் சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதுமட்டுமின்றி மதியம் 2 மணி நிலவரப்படி சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக மெரினா முகத்துவாரத்துக்கு வந்து கடலில் சேர்ந்து வருகிறது. இப்போது வரை மழைநீர் மெரினா கடலில் சென்று சேர்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. இது சென்னை வாழ் மக்களுக்கு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications