அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி? வடகிழக்கு பருவமழைக்கு ரூட் கிளியர்? ஐஎம்டி அப்டேட்
சென்னை: அரபிக்கடலில் நாளை மறுநாள் அதாவது வரும் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக்கடலில் வரும் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரளாவின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதனால், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் வரும் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை காற்று தமிழகம் வழியாக செல்ல வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உருவாகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தமிழகத்தில் அதிக மழை பெய்யும். வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மூன்றாவது வாரத்தில்தான் தொடங்கும். ஆனால், நடப்பு ஆண்டில் முன்கூட்டியே தொடங்க சாதகமான சூழல் உருவாகியிருக்கிறது. அரபிக்கடலில் தற்போது வரும் 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வடகிழக்கு பருவமழை முன் கூட்டியே தொடங்க சாதகமான சூழல் உருவாகியிருப்பதாக வானிலை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்..
வடகிழக்கு பருவ மழை வரும் 12 ஆம் தேதி ஆரம்பிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது. வட மாவட்டங்களை பொறுத்தவரையில் மழையின் அளவு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இயல்பு மற்றும் இயல்பை விட கூடுதல் அளவு இருக்கும் எனவும் தென் பகுதிகளில் இயல்பு மற்றும் இயல்பை விட சற்று குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், கூறியதாவது:- தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளைய தினம் பெய்யக் கூடும். திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் உருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்று தெரிவித்து இருந்தது.












Click it and Unblock the Notifications