சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்க்கும் மழை.. இன்றைய வானிலை நிலவரம் என்ன? குடை ரெடியா மக்களே!
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை கொட்டி வருகிறது. இதனால் காலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இன்றைய வானிலை நிலவரம் என்ன? என்பது பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் தற்போது தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸையொட்டியும், குறைந்தபட்சம் வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸையொட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய பல இடங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை பெருங்குடி, தரமணி, துரைப்பாக்கம், மீனம்பாக்கம், தேனாம்பேட்டை, எழும்பூர், அண்ணா சாலை, மெரினா மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இரவு முதல் காலை வரை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 4.2 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
மேலும் சென்னை வானிலை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு நோக்கி மிகவும் சூப்பரான மழை மேகங்கள் நகர்ந்து வருகிறது. இது காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழையை அளிக்கும்'' என்று தெரிவித்துள்ளார். அதேபோல் இன்னொரு பதிவில் சென்னையில் இன்று மதியம் அல்லது மாலை வரை நல்ல மழை பெய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
இதனால் சென்னையில் வசிக்கும் மக்கள் வெளியிடங்களுக்கு சென்றால் மழையில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் குடை, ரெயின்கோட் உள்ளிட்டவற்றை எடுத்து செல்வது நல்லது. மேலும் இந்த மழையின் காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புழல் ஏரிக்கான நீர்வரத்து கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது. அதன்படி நீர்வரத்து என்பது 80 கனஅடியில் இருந்து 302 கனஅடியாக உயர்ந்துள்ளது. புழல் ஏரியின் நீர்மட்டம் 20.67 கனஅடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications