உருவானது புதிய "காற்றழுத்த தாழ்வு பகுதி.." இந்த இடங்களில் இடி மின்னலுடன் கனமழை.. வந்தது புது அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒரிசா கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த ஒரு மாதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயிலால் அவதியுற்ற மக்களுக்கு இது பெரிய ரிலாக்ஸாக இருக்கிறது.

அதேநேரம் இதுவரை வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதுவும் உருவாகாதது பொதுமக்களுக்குச் சற்றே ஏமாற்றமாக இருந்தது. இதற்கிடையே இப்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாழ்வுப் பகுதி: இன்று (20.07.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒரிசா கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 20) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜூலை 21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 22 மற்றும் ஜூலை 23 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல ஜூலை 24ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் ஜூலை 25இல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூலை 26ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை சின்னக்கல்லாறு (கோவை) 70 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து சோலையாறு (கோவை), வால்பாறை (கோவை), சின்கோனா (கோவை), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 50 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது தவிர நீலகிரி, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களிலும் கணிசமாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் 20.07.2023 & 21.07.2023: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு- வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு- மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் 20.07.2023 & 21.07.2023 தேதிகளில் வடக்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலட்சத்தீவு பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22.07.2023 & 23.07.2023 தேதிகளில் இலட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications