புயல் விட்டாலும் மழை விடாது.. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. நவ. 4 வரை சம்பவம்.. வானிலை அப்டேட்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 4-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புகர் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகளால் மழைக்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கும். இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே 'மொந்தா' புயல் உருவாகி, ஆந்திரா நோக்கி சென்றது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது. தற்போது பருவமழை சற்று இடைவெளி விட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று முதல் நவம்பர் 4 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகர் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் செவ்வாய்க்கிழமை இரவு கரையைக் கடந்த மொந்தா புயல், புதன்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இதனால், தமிழகத்துக்கு பெருமளவு மழை பாதிப்பு இருக்காது. எனினும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகர் பகுதிகளில் அக்டோபர் 30-இல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன்
முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 70 மி.மீ. மழை பதிவானது. மேலும், அவலாஞ்சி (நீலகிரி) - 60 மி.மீ., ஊத்து (திருநெல்வேலி), சின்னக்கல்லாறு (கோவை) - தலா 50 மி.மீ. பதிவானது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications