"மழை நிற்கவே நிற்காது.. இந்த 4 மாவட்டங்களில் நாள் முழுக்க கொட்ட போகும் கனமழை.." வெதர்மேன் அலர்ட்
சென்னை: தென்தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், இன்று எங்கெல்லாம் மழை தொடரும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார்
இந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டிற்குத் தீவிர கனமழை பெய்துள்ளது என்றே சொல்லலாம். தென்மேற்கு பருவமழை இந்தாண்டு போதிய மழையைத் தரவில்லை என்றாலும் அதற்கும் சேர்த்து வடகிழக்கு பருவமழை வைத்து செய்துவிட்டது.

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், இப்போது தென்தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று முதல் தென்தமிழகத்தில் குறிப்பாகத் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கனமழை: இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே பல இடங்களில் வீடுகளிலும் கூட மழை நீர் உள்ளே புகுந்துள்ளது. மேலும், அணைகளின் நீர் மட்டம் அதிகரிக்கும் நிலையில், அணைகளையும் திறந்துவிடும் சூழல் ஏற்படும். இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தாமிரபரணி ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் கழுத்தளவுக்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. அங்கே இந்தளவுக்கு மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். தென்தமிழகத்தில் மழை தீவிரம் குறையும் என்றாலும் இன்றும் அங்கே மழை தொடரும் என்று வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெதர்மேன்: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். அருகிலுள்ள மற்ற மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும். மழை நேற்று போல் தீவிர கனமழையாக இருக்காது. இருப்பினும், இன்னும் தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், "நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியின் சில பகுதிகளில் கனமழை கொட்டும் நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் வரை மழை இருக்கும். இதனால் அங்கே தாழ்வான பகுதிகளில் இருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்" என்றார். அவர் கூறியது போலவே அங்கே கனமழை கொட்டி வருகிறது.
வானிலை மையம்: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பிலும், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை டிச. 19ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 20 முதல் டிச. 23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications