இனி தான் இருக்கு ஆட்டம்.. உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 நாட்களுக்கு கனமழை கொட்டும்!
சென்னை: நேற்றைய தினம் சென்னை உட்பட வட மாவட்டங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தது. இதற்கிடையே இப்போது ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள சூழலில், செப்டம்பர் 16 முதல் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு வட மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக மண்டலம் 05 பாரிமுனை (சென்னை) 110 மிமீ மழை பெய்துள்ளது.. ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை) தலா 90 மிமீ மழை பெய்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் என வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது.

வானிலை மையம்
வரும் நாட்களில் நிலவும் வானிலை தொடர்பாகச் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நேற்று (13-09-2025) வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒரிசா கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (14-09-2025) காலை 0530 மணி அளவில் வடக்கு தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய விதர்பா பகுதிகளில் நிலவியது. இது, காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய விதர்பா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு நகரக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
மழை இருக்கு
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் செப்டம்பர் 16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கனமழை கொட்டும்
செப்டம்பர் 17ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப்டம்பர் 19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. செப்டம்பர் 20ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (14-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (15-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகளில் செப்டம்பர் 14 முதல் 18 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 17 வரை தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications