4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் + சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் மழை பெய்து வருகிறது. இதில் தலைநகர் சென்னையில் 28 சதவீதம் கூடுதலாகவே மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இருப்பினும் சென்னையில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, ஓரிரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். எனவே தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று 17 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை 18 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 19 ஆம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 20 ஆம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications